தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில், வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் குறித்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் கனேடிய தமிழர் தேசிய அவை உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தமிழ் இளைஞர் அமைப்பு, எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக்குழு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு, விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்பனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 222 தனிநபர்களின் பெயர் விபரங்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.























