பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சை அரசியலமைப்பு பேரவை வரையில் சென்றுள்ளது.
முன்னதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனங்களைச் செய்யும் பொறுப்பை தனக்கு வழங்குமாறு கோரி தேசிய பொலிஸ் ஆணையகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை ஆணையகம் நிராகரித்திருந்தது.
பொலிஸ் திணைக்களத்தின் உள் பணிகளில் தேசிய பொலிஸ் ஆணையகம் தலையிடுவதாகக் கூறியே அவர் இந்தப் பொறுப்பைத் தம்மிடம் தருமாறு கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கைக்கு சட்ட மா அதிபரின் அனுமதியும் இருந்ததாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் நியமனங்கள் அல்ல, இடமாற்றங்களே மேற்கொள்ளப்படுவதால் அதனை பதில் பொலிஸ் மா அதிபர் மேற்கொள்ளலாம் என்பதே சட்ட மா அதிபரின் பரிந்துரையாக இருந்தது என்று பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வகுக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலக முடியாது என்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்து விட்டது.
ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க தலைமையில் இந்த ஆணையகம் செயற்படுகிறது.
ஓய்வுபெற்ற அமைச்சக செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், சட்டத்தரணி தில்சான் கபில ஜெயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ் மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த ஜெயசிங்க ஆகியோர் ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.