மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் வடமேற்குப் பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மர்மக் காய்ச்சல் பாதிப்பானது கடந்த ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து பதிவாகியுள்ளது. இதுவரைக்கும் 419 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோடு 53 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பெரும்பாலானோர் காய்ச்சல் ஏற்பட்ட 48 மணி நேரத்துக்குள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி,
போலோகோ நகரில் மூன்று சிறுவர்கள் வௌவாலைச் சாப்பிட்டு 48 மணி நேரத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டுஉயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் காய்ச்சல் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
தற்போது பரவும் மர்மக் காய்ச்சல் கடந்த பெப்ரவரி 9 அன்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 13 பேரின் மாதிரிகள் கொங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
அனைத்து மாதிரிகளையும் சோதனை நடத்தியதில் எபோலா, மார்பர்க் போன்ற இரத்தக்கசிவு நோய்த் தாக்குதல்கள் இல்லை என்றும் தெரிய வந்துள்ளன.