மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (01) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (01) பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 29 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உட்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும், கம்பஹா -வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பேருந்துமே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 29 பேரில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
விபத்தில் காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

