பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை தவிர்க்கும் போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த இலக்கத்திக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தனக்குத் தெரியும் என்றும், இதுபோன்ற தவறான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும், இது குறித்து இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்குத் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் அந்த அமைச்சுடன் தொடர்புபட்ட அரசாங்க நிறுவங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.