மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீதியோரத்தில் சென்று கொண்டிருக்கும் மாடுகளின் உடல்களில் சிறிய கொப்புளங்கள் உடல் நிறைய காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
அம்மை நோயைப்போன்று காணப்படும் இந்த நோயின் பெயர் ‘லம்பி தோல் நோய்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் டாக்டர் உதயராணி குகேந்திரன் கடந்த ஒருமாதங்களுக்கு முன்னர் இது குறித்து தெளிவுபடுத்தியதாவது,
-இது இலங்கைக்கு உரித்த நோய் அல்ல. இது 2012 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தான் முதலில் இனம் காணப்பட்டது. அதன் பிறகு 2019 ஆசியாவிற்கும் அதன் பின்னர் முதன் முதலில் 2020 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் உள்ள சில மாடுகளுக்கு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களுக்கு வரக்கூடிய அம்மை நோயை உருவாக்கும் வைரசினை ஒத்த வைரஸினாலேயே மாடுகளுக்கு இந்த நோய் வருகிறது ஆனால் இது மிருகங்களுக்கு மட்டுமே பரவும் எனவும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. கடந்த காலங்களின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 71 தொடக்கம் 100 மாடுகளுக்கு இந்த நோய் பரவல் ஏற்பட்டிருந்தது ஆனால் இது வரையில் எந்த மரணமும் பதிவாகவில்லை இந்த நோய் பரவலுக்கான முக்கிய காரணமாக சுத்தமின்மை, கொசுக்கள் எனவும் தெரிவித்திருந்தார். மாடு கடத்தல் மூலமாகவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்த நோய் வந்திருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கான எந்த மருந்துகளும் இதுவரையில் மாடுகளுக்கு பலனளிக்கவில்லை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகளை மாடுகளுக்கு வழங்குகிறோம். இருந்தும் தனியார் கால்நடை வைத்தியசாலைகளில் இதற்கான மருந்து காணப்படுவதாக நான் அறிகிறேன். அந்த ஒரு ஊசியின் விலை 700
ரூபாய் என்றும் தெரிவித்திருந்தார்.
பண்ணையாளர்கள் கவலை
இது குறித்து நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில கால்நடை பண்ணையாளர்களை சந்தித்து வினவியபோது சில மாடுகள் உயிரிழந்துள்ளதை அறிய முடிகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட எல்லை பிரதேசமும் மேய்ச்சல் நிலமுமான மயிலத்தமடு, மாதவனை ஆகிய பிரதேச பண்ணையாளர்கள் மாடுகள் உயிரிழந்துள்ளதை உறுதி செய்ததுடன் நோய் குறித்த காரணங்கள் பற்றி தெரியவில்லை எனவும் இதனால் தங்கள் ஜீவனோபாயம் பாதிக்க படுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
தொடர்பு கொண்ட Battinaatham ஊடகம்
அதேசமயம் இன்று (02.08.2023) மட்டக்களப்பு அரச கால்நடை வைத்தியசாலையை எமது Battinaatham ஊடகம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கடந்த நாட்களாக அந்த அம்மை நோய்க்கு சரியா மருந்து இல்லாமலேயே காணப்பட்டது ஆனால் தற்போது அதற்கு சரியான மருந்து கிடைத்து விட்டது சிறிது சிறிதாக மாடுகளுக்கு வழங்கி வருகிறோம் இன்னும் ஓர் இரு மாதங்களில் முற்றாக நோய் இல்லாமல் போய் விடும் என்று உறுதி அளித்திருந்தார்.
மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திற்குள் மாடுகளை கொண்டுவருவதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டிருந்ததுடன் கல்முனையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பொழுதுகூட மக்கள் மத்தியில் மாட்டிறைச்சியை நுகர்வதற்கான அச்சம் நிலவுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.