கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு (OIC) கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது.
‘மோதர நிபுண’ என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி கொட்டாஞ்சேனை மற்றும் கல்பொத்த சந்தியில் உள்ள தொலைபேசி கடையொன்றின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொலையாளிகளை சில மணி நேரங்களில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதனையடுத்து, மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுமாறு அவர்களை மட்டக்குளி, ககாடுபத்த பகுதிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
இதன்போது, அவர்கள் பொலிஸாரை தாக்க முற்பட்டதால் பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிசூட்டில் அவர்கள் உயிரிழந்தனர்.

இதன்பின்னர், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.
மோதர நிபுண என்று கூறி அழைப்பை மேற்கொண்டவர், “கம்பஹாவில் விளையாடியது போல இங்கு விளையாட முடியாது” என கூறியுள்ளார்.
இந்த கொலை மிரட்டல் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் நேற்று (04) அளுத்கடை மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜாவிடம் அறிவித்ததையடுத்து, சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.