நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த தொடருந்து கடவைகள் அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) நடைபெறுற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நமது நாட்டில் பெருமளவில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் உள்ளன. இன்று கூட அளுத்கம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் 400 க்கும் அதிகமாக உள்ளன. அதனால், வீதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்திற்குள் மக்களின் பங்களிப்பு மற்றும் தனியார் துறையை இணைத்துக்கொண்டு, இந்த ஆண்டுக்குள் இலங்கையில் பாதுகாப்பற்றவையாகக் கருதப்படும் அனைத்து தொடருந்து கடவைகளையும் சீரமைப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.
இது எங்களுக்கு உள்ள பொறுப்பு. சிறந்த போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு காலம் தேவைப்பட்டாலும், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்தார்.