ஜனாதிபதியாக எவர் வந்தாலும் சிறிலங்கா அரசை பாதுகாப்பதை, சிறிலங்கா அரசின் பாதுகாப்புப் படையை பாதுகாப்பதை அவர்களுடைய பொறுப்பாக, அவர்களுடைய கடமையாக எடுக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (08) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி வட்டாரக்கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த தேர்தலில் வழங்கிய வேட்பாளர்கள் உங்களுக்கு தெரியும். தேர்தல் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 25 வீதமானவர்கள் 35 வயதுக்கு குறைந்தவர்கள் இருக்க வேண்டும் என்றும், புதிய சட்டத்தின் காரணத்தினால் கடந்த தேர்தலுக்கான வேட்புமனு கொடுத்த விண்ணப்பங்களை மீளாய்வு செய்ய வேண்டிய தேவைகள் காணப்படுகின்றது. சில வேட்பாளர்கள் வெளிநாடு சென்றிருக்கின்றார்கள் சிலர் கேட்க மறுக்கின்றார்கள்.

அந்த வகையில் மீண்டும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தினுடைய அழுத்தத்தின் காரணமாக தான் இந்த தேர்தல் ஆணைக்குழு வரவு செலவுத் திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் வேட்பு மனுக்கான திகதியை வழங்கியிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நாங்கள் அனைத்து சபைகளிலும் கிட்டத்தட்ட 11 சபைகளில் நாங்கள் போட்டியிடுவோம். இந்த 11 சபைகளிலும் இரண்டு சபைகளில் நாங்கள் சிறுபான்மையினராக தான் இருக்கின்றோம். ஆனால் நாங்கள் ஆதரவளிக்கும் ஒரு தரப்பு அந்த சபைகளிலும் ஆட்சி அமைக்க வேண்டும். ஏனைய 9 சபைகளிலும் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு உள்ளூராட்சி தலைவரை உருவாக்குவது தான் எங்களுடைய நோக்கம்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எமது வேட்பு மனுப்பத்திரங்களை நிரப்பி, வேட்புமனு தாக்கல் செய்து எங்களுடைய தேர்தல் வெற்றிக்காக எங்களுடைய பாதையை நாங்கள் தொடங்குவோம்.
இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கம் ஒதுக்கிய நிதியை விட 04 மில்லியன் குறைவாகத்தான் இந்த காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு ஒதுக்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் நாங்கள் கூறும் விடயம் என்னவென்றால் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் சிறிலங்கா அரசை பாதுகாப்பதை, சிறிலங்கா அரசின் பாதுகாப்புப் படையை பாதுகாப்பதை அவர்களுடைய பொறுப்பாக, அவர்களுடைய கடமையாக எடுக்கின்றார்கள். இதுதான் அதனுடைய வெளிப்பாடு என்றார்.
