பொலன்னறுவையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய் எண்ணெயை வைத்திருந்த மற்றும் கொண்டு சென்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பொது சுகாதார ஆய்வாளர்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்புப் படையினர் இணைந்து நேற்று இரவு (09) நடத்திய கூட்டுச் சோதனையின் போது, கர்மந்தபுரய பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தரமற்ற தேங்காய் எண்ணெயை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபர் பொருட்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
41 மற்றும் 51 வயதுடைய சந்தேக நபர்கள், பன்னால மற்றும் சந்திவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சோதனையின் போது 7,700 லீட்டர் தரமற்ற தேங்காய் எண்ணெயுடன் 35 பீப்பாய்கள், 7,920 லீட்டர் தேங்காய் எண்ணெயுடன் 36 பீப்பாய்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.