நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பல மாதங்களாக இதோ, அதோ என்று சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
தீபாவளிக்கே இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தீபாவளிக்குள்ளாவது படத்தின் சூட்டிங் துவங்கப்படுமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது துணிவு. இந்தப் படத்துடன் விஜய்யின் வாரிசு படம் ஒரே நேரத்தில் வெளியாகி, இருபடங்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தும்வகையில் அமைந்தது. துணிவு படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் தன்னுடைய ஏகே62 படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த ப்ராஜெக்ட்டிலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.
அவரது கதை சொல்லல் சிறப்பாக இல்லை என்று காரணம் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் படத்தை தயாரிக்கவுள்ள லைகா அறிவித்தது. கடந்த மே மாதத்திலேயே அஜித் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியான நிலையில் மூன்று மாதங்கள் முழுமையான கடந்த நிலையிலும் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வாரிசு படத்தின் ரிலீசை தொடர்ந்துதான் லோகேஷின் லியோ படத்தின் சூட்டிங்கில் இணைந்தார் விஜய். தற்போது அந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, இன்னும் இரு மாதங்களில் படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் படம் டைட்டிலுடன் அப்படியே நிற்கிறது. மகிழ் திருமேனியும் அடுத்தப்படத்திலும் கமிட்டாக முடியாமல், இந்தப் படத்தின் சூட்டிங்கும் துவங்கப்படாமல் அந்தரத்தில் நிற்கிறார். இதனிடையே, விடாமுயற்சி குறித்த ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளுக்காக அவர் லண்டனில் முகாமிட்டிருந்தார்.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் புனேவில் துவங்கவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் லண்டனிலேயே துவங்கப்பட்டு, முழு சூட்டிங்கும் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் 5ம் தேதி துவங்கி, ஒரே கட்டமாக 100 நாட்களில் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் பைக் பயணத்தில் பிசியாக உள்ள நிலையில், அவருக்காக இந்த லொகேஷன் மாற்றம் நிகழ்ந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் படத்தின் தாமதத்திற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கான கதைக்களம் குறித்து அஜித் தன்னுடைய ஐடியாக்களை கூற, அது தொடர்பான வேலைகளை மகிழ்திருமேனி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சச்சின் படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரனும் தயாரிப்பு தரப்பின் கோரிக்கையை ஏற்று தன் பங்கிற்கு ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார். ஆனால் அது மகிழ்திருமேனிக்கு பிடிக்காமல் போக, அவர் மறுபடியும் தன்னுடைய ஸ்டைலில் ஒரு ஸ்கிரிப்டை ரெடி செய்துள்ளார். இத்தகைய காரணங்களால்தான் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.