கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் தேவ குணசேகரன், கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, தொழிற்சங்கத் தலைவர் எஸ். சுபசிங்க மற்றும் இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மைத்திரி சார்பில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, சான் விஜேலால் டி சில்வா, அங்கஜன் இராமநாதன், திலங்க சுமதிபால, சர்வதேச விவகாரங்களுக்கான வெளிவிவகார செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன, கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி கீர்த்தி உடவத்த ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் எதிர்காலத்தில் நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதற்கான திட்டத்தை தயாரித்து வருகின்றது. எதிர்காலத்தில் இத்திட்டங்களை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்த இரு தரப்பினரையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது, கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் புதிய ஐக்கியத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பரந்த ஐக்கிய முன்னணியை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.