உலக வரலாற்றி முதல் முதல் பெண் பிரதமரை வழங்கிய நாடு இலங்கை. அதன் பின்னர் அரசியல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டஉதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான் தெரிவித்தார்.
சுதந்திரத்துக்கும் நீதிக்குமான தேர்தல் கண்காணிப்பு நிலையமான கபே அமைப்பு ஐக்கிய அமெரிக்காவின் கார்ட்டர் சென்றர் அமைப்பின் அனுசரணையுடன் பெண்களுக்கான சுகாதார மற்றும் ஊடக எழுத்தறிவுடன் நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான 3 நாள் பயிற்சி செயலமர்வு, அமைப்பின் தேசிய நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீ தலைமையில் நேற்று முன்தினம் (12) காலை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன் கார்டன் ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட அவர் தெரிவிக்கையில்,
எமது நாட்டு சனத்தொகையில் 51 வீதம் பெண்கள் இருந்தாலும், அரச உத்தியோகத்தில் 60 வீதம் அங்கம் வகித்தாலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கின்றது. அதனால் தான் அரசியலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகமாக்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, கபே அமைப்பு ஊடாக மாவட்ட ரீதியாக வலுவூட்டல் பயிற்சிகளை வழங்கிவருகின்றோம்.
இதில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதுக்கு பிரதான காரணமாக இருக்கும் விடையங்களை அடையாளம் கண்டு அவர்களை அரசியில் செயற்பாட்டில் ஈடுபடுத்துவது நோக்கமாகும்.
குறிப்பாக ஒரு பெண் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் முதலில் குடும்பத்தினது ஆதரவு இருக்கவேண்டும். இரண்டாவதாக சமூகத்தினது ஆதரவு இருக்க வேண்டும். மூன்றாவதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் ஆதரவு இருக்க வேண்டும் அப்போது தான் பெண்கள் அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளமுடியும்; ஆண்களுக்கு நேராக.

இதனால் தான் 2018ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் 262 வது அத்தியாயத்தின்படி ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண்கள் இருக்கவேண்டும். அவ்வாறு 25 சதவீதம் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வேட்பு மனுவிலும் கலப்பு மற்றும் விகிதாசாரம் அடிப்படையாக கொண்டு இதில் 40 சதவீதமும், வட்டார அடிப்படையில் 60 வீதமும் தெரிவு செய்யப்படுவார்கள்.
இதில் முதலாவது பட்டியலில் அதாவது வட்டாரத்துக்காக தெரிவு செய்யப்படுகின்றதில் பெண்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்படவேண்டும். இரண்டாவது பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் என அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் ஊடாக பெண்களுக்கு அரசியலில் சந்தர்ப்பம் வழங்காத கட்சிகளோ, சுயேச்சைக் குழுக்களோ இதனை கருத்தில் கொண்டு பெண்களுக்கு அரசியலில் ஈடுபடுத்தவேண்டும்.

கடந்த 2024 நவம்பர் 11 ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 22 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பொறுத்தமட்டில் தற்போது 9.8 சதவீதம் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க இனிவரும் காலங்களில் நடக்க இருக்கின்ற மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
சனத்தொகை அதிகமாக இருக்கின்ற போது நூற்றுக்கு 50 சதவீதம் சந்தர்ப்பம் வழங்காவிட்டாலும் 30 சதவீதத்துக்கு அதிகமான சந்தர்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். தீர்மானம் எடுக்கின்றபோது அந்த தீர்மானத்தில் நேரடியாக பங்கு கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களை ஆர்வம் ஊட்டுவதன் ஊடாக இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் பெண்பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பை அரசியல்கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
