மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்ச்சியும், பரிசில்கள் வழங்கலும் நேற்று(03) நாவற்காடு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இதன்போது, அஞ்சல், ஓட்டம், பெண்களுக்கான உதைபந்தாட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
வேண்ட் வாத்திய அணிவகுப்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு, மாணவர் சிப்பாய் அணியினரின் வரவேற்பும் அதிதிகளுக்கு அளிக்கப்பட்டன. ஒலிம்பிக் தீபம் ஏற்றி சத்தியப்பிரமாணம் செய்தலுடன் ஆரம்பமான போட்டி நிகழ்ச்சிகளின் போது மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி, மாகாணக்கல்விப் பணிப்பாளராக பதவி வகிக்கின்ற செல்வி அகிலா கனகசூரியம் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர், உடற்கல்விப்பாட ஆசிரியரர்களினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கவி பாடி, வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் முருகேசபிள்ளைக்கு பணநயப்பு வழங்கி கௌரவித்தனர்.
வலயமட்டப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை அதிகூடிய இடங்களைப் பெற்ற பாடசாலைகளும் இதன் போது வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி பாராட்டப்பட்டன.
மேலும், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களினால் மாகாணக்கல்விப் பணிப்பாளர் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வலய கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.