முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிவிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்திய கருத்துக்களை அடுத்து அவர்கள் தங்களது சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றால், இந்த வாரம் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் எச்சரித்திருந்தன.
இந்த முடிவின் காரணமாக தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் திரும்பி வந்ததை அறிந்ததும், வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும், தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன.
அத்துடன், தேசபந்து தென்னக்கோனை கண்டவுடன் கைது செய்யுமாறு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாத்தறை நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தது.
எனினும், இன்றுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.