ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உட்பட 3 அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா இரத்துச் செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2008-இல் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆட்சியின்போது ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க குடிமகன் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலில் தற்போது தலிபான் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் உள்நாட்டு அமைச்சராக உள்ள சிராஜுதீன் ஹக்கானிக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிராஜுதீன் ஹக்கானி, அப்துல் அஜீஸ் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி ஆகிய மூன்று பேரை ஒப்படைப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளியிட்டிருந்த அறிவிப்பை அமெரிக்கா இரத்துச் செய்ததாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அமைச்சரக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யின் வலைத்தளத்தில் தேடப்படும் நபா்களின் பட்டியலில் சிராஜுதீன் ஹக்கானியின் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது