தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், அந்தக் கட்சிக்கும் நாங்கள் தடைகளை ஏற்படுத்த நேரிடுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏனைய கட்சிகளைவிட தேசிய மக்கள் சக்திக்கே அதிகமான சபைகளில் பெரும்பான்மை இருக்கிறது.
அதனால் அந்த சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், அந்த கட்சிக்கு நாங்களும் தடைகளை ஏற்படுத்த நேரிடும்.

அதனால் மக்களின் தீர்மானத்துக்கமைய பெரும்பான்மை பலம் இருக்கும் சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தடையாக இருக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் யார் என்ன சொன்னாலும் இந்த தேர்தலில் அதிக வெற்றிவாய்ப்புகளை பெற்றுக்கொண்டது தேசிய மக்கள் சக்தியாகும்.
நாங்கள் 267 சபைகளை வெற்றி பெற்றுள்ளதுடன் அதில் 120 சபைகளில் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சியமைக்க முடியும்.
அதன் பிரகாரம் 32 சபைகளில் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றனர். அந்த சபைகளில் எந்த தடையும் இன்றி ஆட்சியமைக்க முடியும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 14 சபைகளில் பெரும்பான்மை கிடைத்துள்ளபோதும் அதில் 13 சபைகளில் அவர்களுக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாது.

அரசாங்கத்துக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாமல் இருக்கும் ஓரிரு சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேவையான கலந்துரையாடல்களை தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
அதன் பிரகாரம் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடுபூராகவும் உள்ள சபைகளில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியுமாகி இருப்பது அரசாங்கத்துக்காகும்.
கொழும்பு மாநகரசபையில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு 11 உறுப்பினர்களே குறைவாக இருக்கிறது. சுயாதீன குழுக்கள் மற்றும் ஏனையவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம்.
ஏனைய கட்சிகளை எடுத்துக்கொள்ளும்போது அந்தந்த கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை இருந்து வருகிறது. இதன் நன்மையும் அரசாங்கத்துக்கே கிடைக்கும்.
அதேநேரம் துண்டு, துண்டு கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஆட்சியமைப்பது முறையல்ல. அதனால் நாங்கள் சபைகளில் ஆட்சியமைக்கும் போது எதிர்க்கட்சிகள் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதேசமயம் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் அடிப்படையில் 117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளநிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளதோடு, ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.
அதேபோன்று 48 உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.