கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும்பாண்மை இனத்தவரின் பின்புலத்துடன் பயணிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டவகையில் பேரவை உறுப்பினர்களில் சிங்களவர்களை கூடுதலாக நியமித்து தமிழர்களின் எண்ணிக்கையினை சிறுபாண்மையாக்கியுள்ளார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக பேரவை விடயத்தை பிரதமரிடம் வலியுத்தியபோதிலும் இதுவரை சாதகமான பதில்கள் எதுவுமே கிடைக்கவில்லை, தேசிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தட்டிக்கேட்க முடியாதவர்களாகவே உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத்தின் மட்டக்ளப்பிலுள்ள அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கைகையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அண்மித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் தமிழ் மக்கள் எமது மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற ஊழலற்ற வன்முறையற்ற எமது இலங்கைத் தமிழரசுக் கடசிக்கு தமது ஆதரவினை வழங்கி தமிழ் மக்கள் தடம் மாறாமல் தொடர்ந்தும் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கிறார்கள் என்பதனை நிருப்பிக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் களமிறக்கப்பட்டுள்ளார்கள். எமது ஜனநாயக கடமையான வாக்குகளை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்துக்கு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலே மாற்றத்தை விரும்பி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழக்கியதன் காரணமாக தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தைக் கைவிட்டு விட்டார்கள் என சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறிவிட்டது. தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என வெளிப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் அதிகபடியான வாக்குகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் கடந்த காலத்தில் பேரினவாத சக்திகளுடன் ஒன்றிணைந்து ஊழல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இணைந்து மட்டக்களப்பிவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் தமிழரின் வாக்குகளை சிதறடித்து தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டினை உடைப்பதற்காக பேரினவாத சக்திகளினுடாக களமிறக்ப்பட்டுள்ளார்கள்.
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நிதானமாக சிந்திக்க வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்கள் என்பது எமது பிரதேச அபிவிருத்தி சார்ந்த ஒன்றாக காணப்படுகிறது. இதற்கு ஊழல் வன்முறையற்ற நேர்மையாக ஜனநாயக ரீதியில் பயணிக்கும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ் தேசியத்தின் அவசியத்தை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த கால அரசாட்சியல் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஊழல் மேசடிகள் வன்முறைகள் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை உணர்ந்து தமிழ் மக்கள் பல கட்சிகளை நிராகரித்திருந்தார்கள்.
புதிய அரசாங்கத்திலும் ஆட்சேர்ப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்ப்பட்டுள்ளன. பாதீட்டில் கிழக்கு மாகாணத்திற்னெ விஷேடமான நிதி ஒதுக்கீடுகள் எதும் இல்லை.
நாங்கள் கேட்கும்போது இந்திய அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த அரசாங்கமாவது தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படுவார்கள் என எதிர்பார்த்தால் அவர்களும் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நியமனத்தில்கூட மிகத் தந்திரோபாயமாக திட்டமிட்டு பெரும்பான்மை இன உறுப்பினர்களை அதிகமாக நியமித்து தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைத்துள்ளார்கள்.
எதிர்வரும் காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் ஊடாக அபிவிருத்தி மற்றும் நியமனங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பாரியளவில் சிங்களவர்களின் பின்னணியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நிலமை உருவாக்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரணி அமரசூரியவிடம் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கூறிய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்ககும் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் பேரினவாதக் கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்கானது தமிழ் மக்களின் இருப்பினை சிதைப்பதாகவும் எமது எதிர்கால வாழ்கையினை அழிப்பதாகவும் அமைந்துவிடும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு. பொறுப்புக் கூறல் விடங்களில் எந்தவித தீர்க்கமான பதிலும் சொல்லாமல் காலம் கடத்ப்படுகின்ற நிலமையே காணப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார்.