தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் கூட்டாக இந்தியாவிடம் வலியுறுத்தவேண்டும் என்று மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு-கிழக்கு சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இணைப்பாளர்கள் ஆ.யதீந்திரா, எஸ். மகாலிங்கசிவம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
அவரது இந்திய விஜயத்தின் பின்னர், 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் விரைவான முடிவுகளை எடுக்கவுள்ள தாக அறிவித்து, அதனடிப்படையில் வேகமாக செயற்பட்டு வருகின்றார். இந்த பின்புலத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் கட்சிகளின் பரிந்துரைகளை கோரியிருக் கின்றார். உண்மையில் 13ஆவது திருத் தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் புதிதான பரிந்துரைகள் தேவையற்றது – ஏனெனில், 13ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும்.
இவ்வாறானதொரு சூழலில், ஜனாதிபதி பரிந்துரைகளை கோருவதானது, 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களையும் பலவீனப்படுத்துவ தற்கே வழிவகுக்கலாம். ஏனெனில், தென்னிலங்கை கடும்போக்குவாத கட்சிகள், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாதென்று வாதிட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெரும்பான்மையான கட்சிகள் பொலிஸ் அதிகாரத்துக்கு எதிராகவே தங்களின் பரிந்துரைகளை முன்வைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதனடிப்படையில் பொலிஸ் அதிகாரமில்லாத மாகாணசபை முறைமையை, தமிழ் மக்களுக்கான தீர்வாக முன்தள்ளும் முயற்சிகள் இடம் பெறலாம். இதனை தமிழ்க் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையான இலக்குவடக்கு கிழக்கை வரலாற்று வாழ்விடமாகக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதாகும்.
இந்த அடிப்படையில்தான், தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ் விடுதலை இயக்கங்கள், இந்தியா வின் வேண்டுகோளுக்கு அமைவாக, தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்தன. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர். வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை குறிப்பிடத்தக்க வகையில் உறுதிப்படுத்தும்என்னுமடிப்படையில்தான், இந்தியாவின் வேண்டுகோளை அனை வருமே ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை, கடப் பாட்டை இந்தியாவிடம் ஒப்படைத்தனர். ஆனால் தற்போது பொலிஸ் அதிகாரத்தை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் இடம் பெறுவதான தோற்றம் தெரிகின்றது. இந்த நிலையில் முன்னாள் விடுதலை இயக்கங்கள், மிதவாத கட்சிகள் அவைரும் ஓரணியில், இந்த விடயத்தை, இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கம் மற்றும் தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது மிகவும் அவசரமான பணியாகும். அனைத்தும் பறிபோன பின்னர், வெறும் அறிக்கைகளை வெளியிடுவதில் பயனில்லைஎன்றுள்ளது.