யாழ் சுழிபுரம் – திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த விடயமானது நேற்றையதினம் (290 சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த காணியை தனியார் ஒருவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணியானது யாருடைய பெயரில் இருக்கிறது என பிரதேச சபையிடம் நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரியிருந்த போதும் அவர்கள் அதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை.

150ற்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்த இடத்தை வாங்கிய நபர் அதில் உள்ள கல்லறைகளை இடித்துவிட்டு சுற்றுலா மையத்துக்கான கட்டடம் அமைக்கப்போவதாக கூறுகின்றார்.
அத்துடன் ரொஜீனா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் குறித்த சிறுமியின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கானது இன்னமும் நிறைவடையவும் இல்லை.
அந்த நிலத்தை வாங்கியதாக கூறியவரிடம் நாங்கள் சென்று, எவ்வளவு பணம் என்றாலும் பிரச்சினை இல்லை, அந்த நிலத்தை நாங்கள் வாங்குகின்றோம் என கேட்டோம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார்.
இது குறித்து பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்கள் நாங்கள் அனுப்பியுள்ளோம். இதுவரை பதிவுத் தபாலில் அனுப்பிய கடிதங்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரை செலவிட்டுள்ளோம். ஆனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதாக கடிதம் அனுப்புகின்றார்களே தவிர எந்தவிதமான நேரடி விசாரணைகளுக்கும் அழைக்கவில்லை.

பொன்னாலையில் மாற்றுக்காணியை பிரதேச செயலகத்தினர் வழங்கினர். ஆனால் அந்த காணியில் ஒரு முழம் கூட தோண்ட முடியாது. அந்த நிலத்தில் சடலத்தை புதைத்தால் 15 வருடங்களானாலும் மச்சுப்போகாது. எமது பகுதியில் இருந்து சடலத்தை அந்த பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் 25ஆயிரம் ரூபா வாகனத்துக்கு செலவிட வேண்டும். ஆகையால் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர், தமது இடம் ஒரு இடுகாடு இல்லை என்றும், அங்கு சடலத்தை புதைப்பதற்கு அனுமதி வழங்க மோட்டோம். இதற்கான மாற்றுத் தீர்வினை கொண்டுவர வேண்டும் என்றார்.
பொன்னாலையில் அந்த காணி வழங்கப்படவில்லை. மூளாய் பகுதியிலேயே வழங்கப்பட்டது என சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தெரிவித்தார்.