கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற போக்குவரத்து பவுசர் ஒன்று நேற்று(01) மாலை 4.00 மணியளவில் மனம்பிட்டிய, ஆச்சிபொக்குவ பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பெருமளவிலான எரிபொருள் வயலில் சிந்தியதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் சக ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த எரிபொருள் பவுசரில் 6,600 லீட்டர் பெட்ரோல் மற்றும் 6,600 லீட்டர் டீசல் காணப்பட்டதாகவும், அதில் அதிக அளவு நெல் வயலில் உள்ள தண்ணீரில் கலந்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், இந்த எரிபொருள் பவுசர் நெடுஞ்சாலையிலிருந்து நழுவி நெல் வயலில் கவிழ்ந்துள்ளது.
எரிபொருள் பவுசரில் இருந்து சிந்திய டீசல் மற்றும் பெட்ரோலை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்ப உள்ளூர்வாசிகள் முயன்ற போதிலும், மனம்பிட்டிய காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர்.