இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை (05) காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளின் போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை ஏற்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் நிமித்தம் அநுராதபுர நகரம், ஜெய ஸ்ரீ மஹா போதி விகாரை மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகள் நாளை மறுதினம், காலை 7.30லிருந்து முற்பகல் 10.30 வரை மூடப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாளையதினம் (05) கொழும்பு காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.