சர்வதேச கண்ணி வெடிகள் தினத்தில் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அத்தாவெட்டுனுவெவ வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது
நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளரும் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தின்பணிப்பாளருமான எம்.எம்.நஷுமுதீன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
நாட்டில் ஏற்பட்ட நீண்ட கால யுத்தம் காரணமாக பல லட்சம் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் யப்பான் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றது.
வெடி பொருட்களையும் அதன் விளைவுகளையும் சரியான முறையில் இனங்காண முடியாது, அவற்றை தவறாக அல்லது விளையாட்டாக பயன்படுத்த முற்பட்ட போது பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு உயிராபத்துக்களும் சேதங்களும் ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு கண்ணி வெடிகள் சார்ந்தும் அதன் பாதிப்புக்கள் சார்ந்தும் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் முதலானோருக்கான விழிப்புணர்வு நிகழ்வாக நேற்றையதினம் இடம்பெற்றது.
கண்ணி வெடிகள் அகற்றும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த விழிப்புணர்வு நிகழ்வினை செய்முறை மூலம் நிகழ்த்திக் காட்டினார்கள்.
இதன்போது மோப்ப நாய்கள் சகிதம் எவ்வாறு கண்ணி வெடிகள் இருக்கும் இடம் இனங்காணப்பட்டு அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதனையும் நிகழ்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெயக்காந் (காணி), வெலிஓயா பிரதேச செயலாளர், வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



