கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையில் பணியாற்றும் வரக்காபொல பகுதியை சேர்ந்த 37 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான சோமிகானி நிலுஷா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் ஒரு பட்டதாரி என தெரிவிக்கப்படுகிறது.
கணவன் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் நிலையில் கடன் நெருக்கடி காரணமாக விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்கவுள்ளதுடன் தானும் உயிரை மாய்க்கவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் தந்தை தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் மீண்டும் வீட்டுக்கு வந்த போது மனைவி மரத்தில் தூக்கிட்டு தொங்குவதையும் குழந்தை அவரது உடலில் தொங்குவதையும் கண்டவுடன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக தாயையும் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதும், தாய் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதும் மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.