நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, கடந்த வாரம் 28 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டையின் விலை, இந்த வாரம் 04 முதல் 06 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தற்போது, இலங்கையின் பல பகுதிகளிலும் ஒரு முட்டையின் விலை 32 முதல் 34 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

கோழிப்பண்ணை விவசாயிகள் முட்டை விலையை உயர்த்தியுள்ளதாகவும், இதன் விளைவாக, வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நாளை மறுநாள் முதல் மீன் விலையும் என்று பேலியகொட மீன் சந்தை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.