13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்திரப்படுத்தப்படும் என அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான பிழையான கண்ணோட்டத்திலிருந்து பெரும்பான்மையின மக்களும் வெளியே வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தெற்கு மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்குத் தொடர்பில் கொண்டிருக்கின்ற பார்வைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கினைப் பொறுத்தளவில் பிரிவினைவாத மற்றும் முற்போக்குவாத கட்சிகள் காணப்படுகின்றன.
எனினும் தெற்கு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது நாட்டைப் பிளவுபடுத்தும் என்ற சிந்தனையை முதலில் அகற்ற வேண்டும்.
இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தினைப் பொறுத்தவரையில் தற்போது ஜனாதிபதிக்கு மிகவும் சவாலான விடயமாகக் காணப்படுவது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எனவும் பிள்ளையான் தெரிவித்தார்.
எனவே இந்த விடயத்தில் அனைவருமே ஒரு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. நம்பிக்கையீனங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்காமல் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
எனவே ஜனாதிபதியின் முடிவுகளுக்கு விட்டுக் கொடுப்புக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிள்ளையான் தெரிவித்தார்