தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட விதிகளை மீறி மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர், செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை (08) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா நாற்பதாயிரம் வீதம் மூவரையும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அதிகாலை வேளையில் வீதியோர சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி கொண்டிருக்கும் போது இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவர்களை கைது செய்தனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.