2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய
“பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7%ஆல் அதிகரித்துள்ளது.
இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lkஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.
2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் முறையே 80% மற்றும் 40%ஆல் அதிகரித்தமையே காரணமாகும். ஏனைய பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது மாற்றமடையவில்லை.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மூலப்பொருட்களின் விலையானது, 2024ஆம் ஆண்டில் 2.2 மடங்கு அதிகரித்துள்ளதோடு 2025ஆம் ஆண்டில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.
செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை பெரும்பாலும் இடம்பிடிக்கும்.
இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமான மூலப்பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1), 2024 (மார்ச் வாரம் 3) மற்றும் 2025 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட பல விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.