“ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள், இஸ்ரேலின் மனித ப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை, ஜனாதிபதியின் கையெழுத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பிரயோகித்து கைது செய்தமை முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது”.இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள் இஸ்ரேலின் மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பிரயோகித்து கைது செய்தமை முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனப் பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக் கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்படி தெரிவித்தார்.
அதேசமயம் பலஸ்தீன ஜனநாயக போராட்டத்திற்கு குரல் கொடுப்பவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம். இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும். இவ் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மக்கள் ஒன்று கூடும், கருத்து தெரிவிக்கும் அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகின்றதா ??? என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.