எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகமும், தேர்தல் பிரச்சார கூட்டதில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று வகையான கட்சிகள் இந்த மண்ணில் போட்டியிடலாம். ஒன்று தென்னிலங்கை சார்ந்த பேரினவாத கட்சிகளின் அனுசரணையுடன் போட்டியிடுகின்ற கட்சிகள், இன்னும் ஒரு வகை இந்த தென் இலங்கை கட்சிகளுக்கு வாக்குகளை சேர்த்து கொடுக்கின்ற அல்லது தென் இலங்கை கட்சிகள் எங்கள் மீது மேற்கொள்கின்ற இடர்கள் அல்லது துயர்களுக்கு பக்க பலமாக இருக்கின்ற கட்சிகள், மூன்றாவது வகை எமது எமது கட்சி தமிழரசு கட்சி போட்டியிடுகின்றது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முத்து பண்டாக்கள், முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பது இல்லை அதேபோன்று முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் அதாவது சிங்கள இனத்தை சார்ந்தவர்களும் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்களும் ஒருபோதும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது இல்லை. ஆனால் முத்துலிங்கம் என்ன செய்வார் என்றால் முத்துலிங்கத்திற்கும் வாக்களிப்பார் முஸ்தபாக்கும் வாக்களிப்பார் முத்து பண்டாக்கும் வாக்களிப்பார் என்றார்.