விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்களை இந்த குழுவினர் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையின் பொருட்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம-கெஸ்பேவ வீதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அந்த நபரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15க்கு மேற்பட்டோர் திடீரென மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை முற்றுகையிட்டு, மருத்துவர்களை மிரட்டி, ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.
பின்னர் உடலை எடுத்து, லொரியில் ஏற்றிச் சென்றுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் நுழைந்த போது அந்தக் குழுவினரின் தாக்குதலால் நுழைவாயில் கதவுகளின் கண்ணாடி சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வந்தவர்களில் பெரும்பாலோர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த நபர்கள் சடலத்தை பாணந்துறை ஆதார மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
பண்டாரகம பொலிஸ் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.