அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால் இலங்கையின் வாகன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயங்களை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நாணயமான யென்னின் பெறுமதி 1.95 ஆக காணப்பட்ட நிலையில் அது தற்போது 2.15 வரை அதிகரித்துள்ளது. யென் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு வாகன விலையில் 20 சதவீத அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும்.

இதனால் இந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் பாதிப்பு ஏற்படும்.
டொலர், பவுண்ட் போன்ற முக்கிய நாணயங்களின் பெறுமதியின் அதிகரிப்பு இலங்கையின் வாகன இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது.
அத்துடன் தற்போது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் அனுமதியில் தாமதங்கள் மற்றும் பிழைகள் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.