உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக இருந்தவர்கள் குறித்த சந்தேகங்களை நிரூபிக்க இராணுவம், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தும் திறன் எங்களுக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் அந்த குற்றவாளிகள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களாக இருந்தார்கள்.
இவற்றை அடக்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் துறையின் 750 அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்தார்.
இன்று, இது தொடர்பாக இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விடயம் இப்போது மிகவும் தெளிவாகியுள்ளது.
வவுணதீவில் இரண்டு பொலிஸாரை விடுதலைப் புலிகள் கொன்றதைக் காட்ட அவர்கள் அந்த அமைப்பின் ஆடைகளை விட்டு சென்றுள்ளனர்.
இதன் பின்னணியில் பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இப்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக விரைவில் உண்மையான குற்றவாளி வெளி வருவார்.

மேலும், பிள்ளையான் கைது செய்யப்பட்ட பிறகு, ரணில் அச்சத்தில் அதிகமாக கழிப்பறைக்குச் சென்றிருக்க கூடும்.
இதன்படி முன்னாள் அரசாங்கத்தால் இப்போது பிள்ளையான் ஒரு தேசபக்தராக மாற்றப்பட்டுள்ளார். மக்களின் அனைத்து எதிரிகளும் இப்போது அரசாங்கத்திடம் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றத்திற்கான மூல காரணத்தை வெளிப்படுத்த பிள்ளையான் இப்போது காத்திருக்கிறார்.
எனவே நாங்கள் ஒரு குழந்தை அரசாங்கம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளை விட இந்த மாதத்தில் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய திருடர்களை விரைவில் சட்டப்பூர்வமாக தண்டிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என கூறியுள்ளார்.