மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி குழு ஒன்றினால் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எமது Battinaatham ஊடகம், கடந்த18 ஆம் திகதி “வவுணதீவில் வீடு ஒன்றிற்குள் நுழைந்து கோபு வாள்வெட்டு குழு அட்டகாசம்!” என்ற தலைப்பின் கீழ் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது.
இந்த செய்திக்கு எதிராக கோபு என்பவர் மட்டு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததன் அடிப்படையில், வவுணதீவு பொலிஸாரினால் Battinaatham ஊடகம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் நேற்று (25) Battinaatham பிரதிநிதிகள் வவவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சென்றிருந்தனர்.
அதேசமயம் கோபு என்ற இளைஞனும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது தரப்பு நியாயங்களை கூறியிருந்தார். அதில் வாள் வெட்டு சம்பவம் என்று குறிப்பிட்ட சம்பவம் பொய்யானது எனவும், இது தொடர்பான அனைத்து விடயங்களும் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரியும் எனவும் தெரிவித்திருந்தார்.
Battinaatham ஊடகத்தில் தன்னை “கோபு வாள் வெட்டு குழுவினர்” என்று அடையாளப்படுத்தியது தன்னை மனதளவிலும், சமூக மட்டத்திலும் ஒரு வாள் வெட்டுக்குழு உறுப்பினர் என்ற பெயரை ஏற்படுத்தியதனால் அது தன்னை மிகவும் பாதித்துள்ளது எனவும் கூறினார்.
இது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விஜயந்த முன்னிலையில் நடந்த விசாரணையில், செய்தியில் குறிப்பிட்டவாறு தான் செயற்படவில்லை என்று அவர் தெரிவித்ததை சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விஜயந்தவும் உறுதிப்படுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில் சம்பவம் நடந்த அன்று (15) ஆம் திகதி உண்மையில் என்ன நடந்தது என்று கோபு கீழ்கண்டவாறு தெரிவித்தார்,
சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் அது ஒரு வாள் வெட்டு சம்பவமோ, தாக்குதல் சம்பவமோ இல்லை.
உறவினர்களுக்கிடையில் நடந்த குறித்த வாக்குவாதம் மட்டுமே. சற்று மோசமான வாக்குவாதமாகவே சென்றது. மாறாக அது எவ்வித மோதலிலும் முடியவில்லை.
நாங்கள் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை. வீடு சேதப்படுத்தப்பட்டது உண்மை. ஆனால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பெண் உட்பட இருவரினால் பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிலும் வாள் மற்றும் தடியால் தாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்திலும் அவ்வாறு அவர்கள் தெரிவித்தாக செய்திகள் இல்லை.
இந்த வாக்குவாதத்திற்கு இடையில் தமக்கு சார்பாக வந்த தமது நண்பர்கள் அவர்களின் வீட்டு எல்லைக்குள் சென்ற நிலையில்தான் அவர்கள்கட்டி வைக்கப்பட்டார்கள். மாறாக அவர்களும் யாரையும் தாக்கவில்லை.
இந்தநிலையில் எமக்கு அளிக்கப்பட்ட “கோபு வாள்வெட்டுக்குக்குழு” என்ற பெயரும், எமக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகவும், அதை வைத்து நாங்கள் ஒரு அடியாட்கள் போல செயற்படுவதாக தெரிவித்த சம்பவமும் பொய் எனவும் அவர் கூறினார்.
தனக்கு வேண்டாத ஒரு சிலரினால் பரப்பப்படும் போலி கருத்துகளினால் தாம் சமூகமட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கோபு, இந்த விடயங்களை எமது Battinaatham ஊடகம் வாயிலாக வெளிக்கொணருமாறும் கேட்டுக்கொண்டார்.
குறித்த உறவினர்களுக்கிடையில் நடந்த வாங்குவாத மோதலில் சேதமாகிய பொருட்களுக்கு தான் நட்டஈடு செலுத்தியதாகவும் கோபு மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இது தொடர்பான செய்திகள் இலங்கையின் பல்வேறு தேசிய ஊடகங்களிலும் வெளியாகியிருந்ததை Battinaatham சுட்டிக்காட்டியது.
அத்தோடு குறித்த இளைஞன் தரப்பு நியாயத்தையும் மற்றும் வவுணதீவு பொலிஸ் தரப்பில் கூறப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தையும் கோபுவின் விருப்பத்தின் பேரில் நாங்கள் மேற்படி செய்தியாக Battinaatham வெளியிடுகிறது.