பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் அந்நாட்டு இராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது.
பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புப் படையில் பணியாற்றிய ஹாஷிம் மூசா பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து வெளிவந்த அவர், தடைசெய்யப்பட்ட லஷ்கர் – ஏ – தொய்பாவில் இணைந்துள்ளார்.

ஹாசிம் மூஸா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவி, ஸ்ரீநகர் அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஷ்மீரில் சதித்திட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில், லஷ்கர் – ஏ – தொய்பாவில் இணைய பாகிஸ்தான் இராணுவமே ஹாஷிம் மூஸாவிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி பெற்ற சிறப்புப் படை வீரரான மூஸா, போர் மற்றும் இரகசிய நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் அதிநவீன ஆயுதங்களை கையாள்வதில் திறம்பட செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூஸா குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
