மொரஹாஹேனவில் சந்தேகத்தின் பேரில் தாங்கள் கைதுசெய்த நபரை பொலிஸார் ஈவிரக்கமின்றி தாக்கியமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
சீருடை அணியாத நான்கு பொலிஸார் மொரஹாஹேனவில் இன்று காலை 33 வயது நபரை கைதுசெய்துள்ளனர்.
தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இசைநிகழ்வொன்றிற்கு சென்றுவிட்டு அங்குள்ள கடையொன்றில் உணவருந்திக்கொண்டிருந்தவேளை அவரை கைதுசெய்துள்ளனர்.

ஈசட் பண மோசடி தொடர்பிலேயே அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் உரிய அறிக்கை கொழும்பிலிருந்து வரும்வரை அவரை விடுதலை செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
நபர் ஒருவரின் படத்தை காண்பித்து அது அவர் என ஏற்றுக்கொள்ளும் பலவந்தப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த இளைஞனை ஈவிரக்கமின்றி தலை,முகம், வயிறு கைகால்களில் தாக்கியுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கே அவர் கைதுசெய்யப்பட்ட விபரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அயலர்களே இது குறித்து அந்த இளைஞனின் குடும்பத்தவர்களிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தாங்கள் அந்த இளைஞனை கைதுசெய்துள்ளமை குறித்து பொலிஸார் அந்த இளைஞனின் குடும்பத்தவர்களிற்கு தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட நபரின் மனைவி அவரை பார்ப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றவேளை வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலேயே அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதற்கு அவர் பொலிஸார் காலையில் ஒன்றையும் மதியம் ஒன்றையும் தெரிவிக்கின்றனர் என சுட்டிக்காட்டியவேளை பின்னர் தாங்கள் தேடும் நபர் அவர் இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார் 3.30 மணியளவில் அவரை விடுதலை செய்துள்ளனர் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.