இந்த ஆண்டும், இந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட மே தின கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.
அதன்படி, கொழும்பு நகரில் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் 14 மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்தவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் மே தினக் கூட்டம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலை லிந்துலை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
“நாட்டை வெல்ல தொழிலாளர் சக்தி” என்ற கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் அசோக சேபால தெரிவித்தார்.
“ஏமாற்றத்தை சகித்துக்கொண்டது போதும், இப்போது எழுவோம்” என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வை கட்சி தலைமையகத்தில் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்தார்.

“தொழிலாளர்கள் தொழில்முனைவோரை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தப்போவதாக சர்வஜன அதிகாரம் கட்சி தெரிவித்துள்ளது.
வரக்காபொல வாராந்த சந்தை வளாகத்தில் காலை 10.30 மணிக்கு இதன் மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த மே தினக் கூட்டம் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், முன்னணி சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்யும் மே தினக் கூட்டம் கிருலப்பனை லலித் எதுலத்முதலி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று நடைபெற உள்ள மே தின பேரணிகள் காரணமாக விசேட போக்குவரத்து திட்டமும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் பல இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் மே தின கூட்டங்கள், பேரணிகள் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக ஏதேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், வாகன சாரதிகள் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.