அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய மத்திய நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது. இந்த ஏற்றுமதி வரி நேற்று முதல் (மே 1-ம் திகதி) அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி இந்தியாவில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு அரிசி இருப்பதும், விநியோகமும் தொடர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி உடனடியாக அமுலுக்கு வருவதாகவும், வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், 2022 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த அரிசி ஏற்றுமதிக்கான அனைத்து தடைகளையும் இந்திய மத்திய அரசு நீக்கியது, அதே நேரத்தில் உடைந்த அரிசி ஏற்றுமதி மீதான தடையையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. புழுங்கல் அரிசி மீதான சுங்க வரியை 10 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைத்த சில மணி நேரங்களுக்குள், வெள்ளை அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) இரத்து செய்தது. உயர் மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இது முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.