இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய ஆகாய கப்பலை செலுத்துவது தொடர்பான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.
இந்த ஆகாய கப்பலானது கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ. தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும்.
இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும்.
இந்த ஆகாய கப்பலை கடந்த சனிக்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் பறக்கவிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) பரிசோதனை செய்தது.
இதன்போது இந்த ஆகாய கப்பல் 62 நிமிடங்கள் பறந்தது. அவ்வேளை ஆகாய கப்பலின் ஆழுத்தம், கப்பலை அவசரமாக தரையிறக்குவதற்கான நடைமுறைகள் போன்ற விடயங்களை பரிசோதனைக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆகாய கப்பல் மாதிரியின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் இது இந்தியாவின் மிக முக்கியமான சாதனை எனவும் டிஆர்டிஓ தலைவர் சமிர் வி.காமத் தெரிவித்தார்.
இதுபோன்ற ஆகாய கப்பல் தொழில்நுட்பமானது உலகில் சில நாடுகளில் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆகாய கப்பலை இந்தியா உருவாக்கி, அதை செலுத்துவதற்கான பரிசோதனை முறைகளையும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.