13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ரணிலின் அறிவிப்புகள் சோர்வடைந்திருந்த சிங்கள தேசியவாத சக்திகளை உற்சாகப்படுத்தியிருக்கின்றதா? கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சியை தொடர்ந்து சிங்கள
தேசியவாதம் வீழ்ச்சியடைந்து விட்டதாகவே பலரும் கூறினர். தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் சிந்தனையாளர்கள் சிலர், கோட்டாபயவின் வீழ்ச்சியை சிங்கள தேசியவாதத்தின் இறுதிக்கட்டமென்றுகூட வர்ணித்திருந்தனர். ஆனால், நிலைமைகள் அதற்கு தலைகீழாகவே இருக்கின்றன.
13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளவற்றை முழுமையாக அமுல்படுத்த வேண்டாமென்னும் சுலோகத்தை முன்வைத்து, தங்களை மீளவும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் சிங்கள கடும்போக்கு வாதிகள் தங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்தப் பின்புலத்தில் தான் ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் டயஸ் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான மகாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றார். ஓர் இராணுவத் தளபதி 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக களமிறங்குவது சாதாரணமாக எடுக்கக்கூடிய விடயமல்ல.
கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் அனைத்து சிங்கள தேசியவாத தரப்புகளும் ஒன்றுபட்டிருந்தன. இந்த பின்புலத்தில்தான் கோட்டாபய தனிச்சிங்கள வாக்குகளில் வெற்றிபெற்றிருந்தார். இதன் மூலம் தங்களின் விருப்பங்கள் அனைத்தையும் கோட்டாபயவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்னும் திட்டமே சிங்கள- பௌத்த சக்திகளிடம் இருந்தது. கோட்டாபயவும் சிங்கள கடும்போக்கு பௌத்த
தேசியவாத தரப்புகளை மட்டும் திருப்திப்படுத்தும் திட்டங்களுக்கானஅறிவிப்புகளையே வெளியிட்டிருந்தார். தன்னையொரு பௌத்த – சிங்களத் தலைவன் என்றும் பிரகடனம் செய்தார்.
புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதன் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடுவதுடன் அதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மாவட்ட சபை முறைமை தொடர்பில் சிந்தித்தார். இந்த அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்புக்கான ஆலோ சனைக் குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் இருந்தவர்களில் பெரும்பான்மையினர் 13ஆவது திருத்தச் சட்டம் நாட்டுக்கு பயனற்றதென்னும்
நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்களாவர்.ஆனால், எதிர்பாராத வகையில் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்திலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகியதைத் தொடர்ந்து, சிங்கள – பௌத்த தேசியவாத தரப்புகளின் எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில்தான், தங்களின் திட்டங்கள் அனைத்தும் இடைநடுவில் நின்றுவிட்ட ஆவேசத்தில் இருந்தவர்கள் அனைவரும், தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்து தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளவும் வீழ்ச்சியடைந்த சிங்கள தேசியவாத சக்திகளை அதிகாரத்துக்குக் கொண்டுவரவும் முயற்சிக்கின்றனர். ரணிலின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
சிங்கள – பௌத்த தேசியவாத தரப்புகளின் 13இன் மீதான எதிர்ப்பு என்பது ஒரே நேரத்தில் மூன்று வகையான எதிர்ப்புகளுக்கான கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. முதலில் – தமிழர் விரோதம், இரண்டாவது –
இந்திய எதிர்ப்பு, மூன்றாவது – ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வருவதை எதிர்ப்பது. சிங்கள – பௌத்த தேசியவாத தரப்புகளை பொறுத்த வரையில் ரணில், அவர்களின் விருப்பத்துக்குரிய ஒருவரல்ல. ஒரு
வேளை, ரணில் வெற்றிபெற்றாலும்கூட ஒரு கட்டத்துக்கு மேல் அவர் நகர்வதை தடுப்பதற்கு சிங்கள – பௌத்த தேசியவாத அரசியல் தரப்புகள் பாராளுமன்றத்தில் பலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தங்களது விருப்பங்களை பாதுகாக்க முடியும். இதற்கு பலம் சேர்க்கும் விடயமாகவே, சிங்கள – பௌத்த தரப்புகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை கையிலெடுத்திருக்கின்றனர்.