“என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த அம்ஷிகா என்னும் மாணவிக்காக நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று 11.05.2025 மட்டக்களப்பு காந்திப்பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அம்ஷிகாவின் ஆத்மசாந்திவேண்டியும், அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது “பரிதாபம் வேண்டாம். பாதுகாப்பு வேண்டும்”, “ஒன்றாய் எழுந்தால் சீண்டல் அழியும்”, “தண்டனை இல்லையெனில் குற்றமும் தொடரும்”, “தண்டனை இல்லையென்பதே குற்றவாளியின் தைரியம்”,”என் உடலை உன் உரிமையென எண்ணாதே’, “அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்” போன்ற பதாதைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.





