தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காதபோக்கும், தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்க நடந்துகொள்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்கள அரசும், சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான தயாளகௌரி, டினேஸ், தனுபிரதீப் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் மற்றும் சத்துக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக விளக்கேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டதை தொடர்ந்து உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

எங்கெங்கு தமிழர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்களோ அங்கு எல்லாம் இனஅழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்றுவருகினற்ன. இந்த சத்துக்கொண்டான் பகுதியிலே பாரிய படுகொலைகள் நடாத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றது.
ஒரு இன அழிப்பு நோக்குடன் வடகிழக்கில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டதுடன் எமது விடுதலைப்போராட்டத்தினை நசுக்குவதற்காக பல இடங்களில் படுகொலைகள் நடாத்தப்பட்டிருந்தது.
சத்துருக்கொண்டானின் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகள் பின்னர் முடக்கப்பட்டது.
இன்று இந்த அரசாங்கம் பட்டலந்த வதைமுகாம் விடயங்களை கையிலெடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள முன்னெடுத்திருக்கும் அதேநேரம், வடகிழக்கில் பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்ற வரலாற்றின் சாட்சியங்களாகவும் ஆவணங்களாகவும் இருக்கின்றபோதிலும் அது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமல் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கு, தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான உறுதிப்பாடற்ற நிலையிலே அவர்களுக்கான நியாயமான உரிமைகள், அவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கான உறுதிப்பாடுகள் இல்லாத நிலையிலேயே சிங்கள பௌத்த தேசிய அரசுகள் நடந்துகொள்கின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே பொதுமக்கள் கொத்துக்கொத்தாக இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவமானது தமிழினத்தினை இந்த நாட்டில் இல்லாமல்செய்வதற்கும், வடகிழக்கு தாயப்பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைத்து கையேந்தும் நிலையிலேயே நிர்க்கதியற்ற நிலையில் தமிழ் மக்கள் வாழவேண்டும், தமிழ் மக்கள் தமது உரிமைகளை இனிஒருபோதும் போராடி கேட்ககூடாது என்ற அடிப்படையிலே பல்வேறு திட்டமிட்ட படுகொலைகள் நடந்தேறியது.
இந்த படுகொலைகளுக்கான நீதிநியாயம் கூட எந்தவகையான வழிகளிலும் நடைபெறவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நீதிநியாயத்திற்காக தமிழ் தேசிய சக்திகள் தமிழ் இனத்தில் பற்றுக்கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கின்றபோதிலும் அதற்கான எந்த அங்கீகாரத்தினையும் இந்த நாடுவழங்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நியாயமாக, நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையினை இல்லாமல்செய்துள்ளது.
இன்று இந்த பொருளாதார நெருக்கடிக்கு கூட தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக அடக்கி ஒடுக்கப்படுதலே காரணமாக அமைந்திருக்கின்றது. இவற்றினை சிங்கள தேசிய இனம் புரிந்துகொள்ளாத நிலையில் இந்த நாடு சுபீட்சமான நாடாக மாறுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்க அரசும் சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
ஒரு இனத்தின் விடுதலையானது, ஒரு இனத்தின் இருப்பானது மிக காத்திரமான முறையில் ஒரு அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படாவிட்டால் நாட்டில் மக்கள் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் வாழும் நிலையேற்படும்.
அந்தவகையில் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதிநியாயம் கிடைக்கவேண்டும். இந்த சம்பவங்கள் எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும்.
இவ்வாறான படுகொலைகளும் அடக்குமுறைகளும் கடந்தகாலத்தில் நடைபெற்றது என்பதை எதிர்கால சந்திக்கு கொண்டுசென்று எமது தமிழ் தேசியத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தினையும் தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டத்தினையும் எமது இளம் சந்ததிகள் தெரிந்துகொள்ளவேண்டும் அதன் முன்கொண்டுசெல்லவேண்டும். என்றார்.
