அம்பாறை தம்பிலுவில் கிராமத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஆரம்ப நிகழ்வான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நேற்று (12) மாலை 5.30 மணிக்கு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கடும் வரட்சியிலிருந்து நாட்டை பாதுகாத்து மழை பெய்ய வேண்டும் என்றும் நாடு செழிக்க வேண்டும் என்றும் துன்பங்கள் ஒழிய வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டி வருடம் தோறும் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் கிராம மக்கள் இந்த வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



பிரசித்தி பெற்ற தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வீதியில் மழை வேண்டி முன்னெடுக்கும் கொம்புமுறி விளையாட்டு வழிபாடும் கண்ணகி அம்மனை முன்னிருத்தி மேற்கொள்ளப்படுகிறது.
அம்மை கொப்பளிப்பான், கண்நோய் போன்ற நோய்களை அம்மன் கோதாரி என்று அழைப்பது தம்பிலுவில் பிரதேச வழக்கம். அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவுவதாலும், மஞ்சளும் வேப்பிலையாலும் கண்ணகி அம்மனுக்கு விழா நடத்தினால் அம்மன் மகிழ்ச்சி உற்று மழை பொழியும் எனவும் நோய்கள் குறையும் எனவும் மக்கள் நம்புகின்றது குறிப்பிடத்தக்கது.