இலங்கை அரசின் கொடூரமும் கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச்செய்யப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டினையும், எமது எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக இனஅழிப்பு வாரத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (13) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் புதிய உறுப்பினர்களான சிவம்பாக்கியநாதன், சுதர்சன், பிரேமானந்தன் உட்பட பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உப்பில்லா கஞ்சிகாய்ச்சும் நிகழ்வு நடைபெற்றதுடன், இதன்போது இறுதி யுத்ததின்போது அழிப்புசெய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் தமது உறவுகளை தேடி உயிர்நீர்த்த தாய்மார்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் என்னும் துண்டுப்பிரசுரங்களும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்போது பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி, இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன அழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, நேற்றைய தினம் 12ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 17ஆம் தேதி வரை எங்களுடைய அப்பாவி பொதுமக்கள் இறுதி யுத்தத்தின் போது உணவுக்கு கஷ்டப்பட்டு உயிரிழந்த சம்பவங்களை நினைவு கூறும் முகமாக நாங்கள் இன்றைய தினம் காந்தி பூங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆகிய நாம் முன்னெடுக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் கஞ்சி கூட கிடைக்காமல் எத்தனையோ அப்பாவி சிறுவர்கள் பொதுமக்கள், வயோதிபர்கள், தாய்மார்கள் என்று கையில் இருந்த கொஞ்சம் பிடி அரிசிகளை சேகரித்து சிறிய அளவு உப்பை சேர்த்து கிடைத்த நீரை ஊற்றி கஞ்சி தயாரித்து குடிப்பதற்கு பாத்திரங்கள் இன்றி சிரட்டைகளில் தான் அந்த கஞ்சியினை வேண்டி அதுவும் வரிசையில் நின்று வேண்டுவதற்கு பாடுபட்டு கஞ்சிகளை அருந்தி உயிர் தப்பியவர்களும் உண்டு அது கிடைக்காமல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களும் சிறுவர்களும் இருக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு கடைசி யுத்தத்தில் இந்த இலங்கை அரசாங்கம் செய்த அநியாயம் கொடூரமான செல் தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் இதன் போது எமது மக்கள் சிதறிக் கொண்டிருந்த வேளையில் இந்த கஞ்சிக்கு கூட இல்லாமல் நிறைய கஷ்டங்களை அனுபவித்து உயிர் இழந்த மக்களை நினைவு கூறும் முகமாக இன்று வடக்கு கிழக்கு அனைத்து பகுதிகளிலும் அனைவரும் இன அழிப்பு வார கஞ்சியினை வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம். அடுத்த சந்ததியினருக்கு இவற்றை கொண்டு செல்லும் முகமாக துண்டு பிரசுரங்களும் வழங்கி, இந்த மக்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைவு கூறும் முகமாக கஞ்சியினை மக்களுக்கு வழங்கிய நினைவு கூர்ந்து வருகின்றோம்.
மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து இந்த கஞ்சியினை பருகுகின்றார்கள். இதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வார்கள். இளம் சமூகங்கள் இதனைப் பற்றி மறந்தவர்களாகவும் அல்லது அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் அதற்கு எமது இனம் இதனை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கட்சியினை பரிமாறுகின்றோம்.
சர்வதேசத்திற்கும் இதனை எடுத்துக்காட்டி, இத்தனை வருடமும் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதுவித பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே சர்வதேசம் இனியும் பாராமுகமாக இருக்காது எங்களுக்கு நடைபெற்ற இந்த அநியாயத்துக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்.











