இலங்கையை ஆண்ட இராவணன் தமிழ் மன்னனா சிங்கள மன்னனா என்பது தொடர்பில்
நேற்று பாராளுமன்றத் தில் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, இந்த விடயத்தை முழுமையான
ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று பல பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். ஐக்கிய
மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்த
தனிநபர் பிரேரணையே சர்ச்சைக்கு வழிவகுத்தது. அவர் தனது பிரேரணையில், “இராவணன்
தொடர்பாக ஆராய்ந்துமுழுமையான வரலாற்று தகவல்களை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இராவணன் தொடர்பில் பல்வேறு குழப்பமான தகவல்கள் உள்ளன”, என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இராவணன் தமிழர் என்றும்
சிங்கள பாராளுமன்றஉறுப்பினர்கள் சிலர் அவரை சிங்களவர் என்றும் உரிமை கொண்டாடியதை அடுத்தே சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து இராவணன் குறித்து முழுமையான ஆய்வு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
அதேசமயம் இராவணன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவனை தமிழர் என்று குறிப்பிட்டுக்
கொண்டு இனவாதத்தை தூண்டி விட முயற்சிக்கிறார்கள் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றஉறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இராவணன் தொடர்பில் நேற்று பாராளுமன்றில் எழுந்த சர்ச்சையையடுத்து பேசிய அவர்,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணனன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்தாரெனக் குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாக உள்ளது.
மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடு வதை மறுக்க முடியாது.
இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராவணன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ் பூர்வீகம் என்பது பொய்
என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப் பட வேண்டும்.
மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணனின் படை கொடியில் சிங்கம் சின்னமாக உள்ளது.இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரின் உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்கள தலைவர் – என்றார்.