நுளம்பு முட்டைகளுடன் இனங்காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மே 09 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போதே குறித்த இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
விசேட நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது, 128,824 வளாகங்கள் – 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரசு அலுவலகங்கள், 5,025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள் மற்றும் 514 மத வளாகங்கள ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, 31,145 நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில், பாடசாலைகள் போன்ற பொது இடங்கள், கட்டுமான தளங்கள் கொசுக்கள் பெருகும் இடங்களைக் கொண்டிருந்தன.
ஆய்வு செய்யப்பட்ட 257 பாடசாலைகளில் 132 பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டன.
ஆய்வு செய்யப்பட்ட வீடுகளில் நான்கில் ஒரு பங்கு வீடுகளிலும் இதுபோன்ற இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

நுளம்பு முட்டைகள் உள்ள 6,777 வளாகங்கள் இதன்போது இனங்காணப்பட்ட நிலையில், 15 மாவட்டங்களில்,சுமார் 4,000 இடங்களுக்கு சுகாதார அதிகாரிகள் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்றுக்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், கொழும்பு மாநகராட்சி பகுதிக்குள் உள்ள பல அரச நிலங்கள், நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற இடங்களாக மாறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.