விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை, பயனர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை X நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் வாயிலாக மாதம் 3 லட்சம் ரூபாய் வரை பிரீமியம் சந்தா திட்டத்தில் உள்ள பயனர்கள் வருவாய் ஈட்டலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்து தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றியது வரை பிரச்னைகள் நிறுவனத்தை சூழ்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. ப்ளூ குறியீடு பறிக்கப்பட்டு சந்தா கோரப்பட்டது, பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்கள், சில நாடுகளில் தடை என இவை அனைத்தையும் எக்ஸ் நிறுவனம் கடந்து வரவேண்டும். இந்த சூழலில், பயனர்களை தக்கவைக்க புதிய திட்டங்களை எலான் மஸ்க் தலைமையிலான குழு செயல்படுத்தி வருகிறது.
ஜூலை மாதம், எலான் மஸ்க் உலகெங்கிலும் உள்ள தகுதிவாய்ந்த படைப்பாளர்களுக்காக விளம்பர வருவாய் பகிர்வை அறிமுகப்படுத்தினார். இப்போது X பயனர்களுக்கு வருவாய் பகிர்வை செலுத்த தொடங்கி இருக்கிறது. எனவே, நாமும் எப்படி எக்ஸ் தளத்தின் வாயிலாக சம்பாதிக்கலாம் எனப் பயனர்கள் தங்களின் பார்வையை விரிவுபடுத்தியுள்ளனர்.
விளம்பர வருவாய் பகிர்வு என்றால் என்ன?
விளம்பர வருவாய் பகிர்வு அம்சம் X Blue Tick சந்தாதாரர்கள் தங்கள் பதிவுகளுக்கான பதில்களில் காட்டப்படும், விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கைப் பெற அனுமதிக்கிறது. மேலும், வெரிஃபைடு கணக்குகளில் பார்வையாளர் காணும் விளம்பரங்கள் வாயிலாகவும் நேரடியாகப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் வருவாய் பகிர்வு விதிமுறைகள்!
X பிரீமியம் சந்தாவைப் பெற வேண்டும்.
iOS, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்தியாவில் மாதந்தோறும் 900 ரூபாயும், இணைய பயனர்களுக்கு மாதந்தோறும் ரூ.650 என்ற விலையிலும் சந்தா திட்டம் செயல்படுகிறது.
கிரியேட்டர்கள் கடந்த 3 மாதங்களுக்குள் தங்கள் ஒட்டுமொத்த இடுகைகளில் குறைந்தது 15 மில்லியன் ஆர்கானிக் இம்ப்ரெஷன்களைப் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, ஒருவர் தனது கணக்கில் குறைந்தபட்சம் 500 பேரை பின்தொடர்பவர்களாகக் கொண்டிருக்க வேண்டும்.
ஸ்ட்ரைப்பில் (Stripe) கணக்கு வைத்திருக்க வேண்டும். இது ஒரு கட்டணச் செயலாக்க தளமாகும். இது தகுதியான பயனர்களுக்கு பணம் செலுத்த X பயன்படுத்தும்.
தகுதிகள் என்ன?
குறைந்தது 18 வயது ஆகி இருக்க வேண்டும்.
குறைந்தது 3 மாதங்களுக்கு ஆக்டிவாக உள்ள ட்விட்டர் கணக்கை வைத்திருக்கவும்.
30 நாள்களில் குறைந்தது 25 ட்வீட்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.
முழுமையான சுயவிவரத்தை வைத்திருக்க வேண்டும்
உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து, 2 ஃபேக்டர் ஆதெண்டிகேஷனை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
உங்கள் சுயவிவரத்தில் உண்மையான அடையாளத்தை வைத்திருக்கவும், மற்றவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யக் கூடாது.