உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சபை முறைமையுடன் எதிர்கால நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம். அதன்படி, எதிர்வரும் பெரும் போகத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்,
மேலும், மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தாலும், அதில் திருப்தி அடைய முடியாது. அஸ்வெசும திட்டம் நாட்டு மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க வழிவகுத்துள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கல்வி, தொழில்பயிற்சி மற்றும் அந்தந்த மாகாணங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுதல் ஆகிய பணிகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.