கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்வங்கள், சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை, கப்பம் பெற்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட, இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் உள்ளிட்ட இருவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
முதலாவது சந்தேகநபரான இனிய பாரதியின் வழிநடத்தலில் செயற்பட்ட ஒருவரே, இரண்டாவது சந்தேகநபராக மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய கருனா அம்மானுடன் இணைந்து, திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதக்குழுவின் தலைவராக இனிய பாரதி செயற்பட்டு வந்ததுடன், 2007 மற்றும் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்துக்கான ஜனாதிபதியின் இணைப்பதிகாரியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
மேலும், 2012 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகவும் இனிய பாரதி பதவிவகித்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தனின் வழிநடத்தலின் கீழ், கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஆவணக்காப்பகத்தில் ஏற்பட்ட தீப்பரவலுடன், இனிய பாரதி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு நேரடித் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை முகாம்களை நடத்திச் சென்றமை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவாளியாக இனிய பாரதி பெயரிடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








