டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி, மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பகுதியைச் சேர்ந்த 4 வருடங்கள் 2 மாதங்கள் வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல் காரணமாக முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையில், டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல்களே உயிரிழப்புக்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








